இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

ஏற்கனவே 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.. கவுகாத்தியில் நடந்த 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கடந்த போட்டியில் ரன்களை கொடுத்த சீன் அபோட்டுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன் களம் இறக்கப்பட்டார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷான் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது. இதையடுத்து சூர்யகுமார் மற்றும் ருதுராஜ் இருவரும் இணைந்து ரன் சேர்த்தனர்.

சூர்யகுமார் 29 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா 31 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் 35 ரன்களுடனும், ஆரோன் ஹார்டி 16 ரன்களுடனும் சுமாரான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலீஷ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதன்பின்னர், மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 60 ரன் பார்ட்னர்ஷிப்பில் ஆட, ஸ்டோனிஸ் 17 ரன்களில் அவுட்டாக, அணி சரிவில் இருந்து மீண்டது. பின் கேப்டன் வேட் – மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்த மேக்ஸ்வெல் கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து மிரட்டினார். கடைசி 12 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட, அக்சர் படேலின் 19வது ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது.

பின் பிரசித் கிருஷ்ணாவின் கடைசி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட முதல் பந்தில் வேட் பவுண்டரி அடித்து, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். பின் மேக்ஸ்வெல் 3,4 மற்றும் 5வது பந்தில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்து சதம் விளாசினார்.  ஓவரின் 5வது பந்தில் சதம் அடித்தார். கடை பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடித்து போட்டியை முடித்தார். மேக்ஸ்வெல் 48 பந்துகளில் (8 பவுண்டரி, 8 சிக்ஸர்) 104 ரன்களுடனும், வேட் 16 பந்துகளில் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 68 ரன்கள் வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை தக்கவைத்துள்ளது.