இந்தியாவின் தோல்விக்கான தவறு ஓரளவு இந்திய ரசிகர்களிடமே உள்ளது என்று வாசிம் அக்ரம் தவறை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியாவை உலகக் கோப்பை சாம்பியனாக அறிவித்ததற்காக ரசிகர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சாடியுள்ளார். இந்தியா 10 வெற்றிகளைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று  உலகக் கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா, டாஸ் முதல் வெற்றி ஷாட் வரை ஒவ்வொரு திருப்பத்திலும் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை மிகவும் சிரமப்படுத்தினர், 11 முதல் 40 ஓவர்கள் வரை, இந்திய பேட்ஸ்மேன்கள் 4 பவுண்டரிகளை மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்திய அணி பேட்டிங்கில் பிரகாசிக்கவில்லை, ஆனால் பந்துவீச்சை நன்றாகத் தொடங்கியது. ஆஸ்திரேலியா 47/3 என்று இருந்தது, ஆனால் போட்டி முன்னேறும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் உகந்ததாக மாறியது,  இந்தியாவின் தோல்விக்கான தவறு ஓரளவு இந்திய ரசிகர்களிடமே உள்ளது என்று அக்ரம் கூறியுள்ளார்.

இந்திய ரசிகர்களுக்கு அனுதாபம் தெரிவித்த அக்ரம், டிவி மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே இந்தியாவை வெற்றியாளர்களாக ஆக்கிவிட்டதாகவும், வீரர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்து மக்களின் நம்பிக்கையை அதிகரித்ததாகவும் அக்ரம் கூறினார்.

இதுகுறித்து அக்ரம் கூறியதாவது, “ஒரு தேசமாக, உங்கள் அணி போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடியதால், அதைக் கடப்பது கடினமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் (இந்தியா) 10 போட்டிகளில் வெற்றி பெற்றனர், நிலைத்தன்மை இருந்தது. ஆனால் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், ரசிகர்கள்… நீங்கள் அனைவரும் ஏற்கனவே இந்தியாவை உலகக் கோப்பையை வெல்லச் செய்துவிட்டீர்கள், உங்கள் தவறையும் ஏற்றுக்கொள்ள்ளுங்கள், மன்னிக்கவும், அவர்கள் நன்றாக விளையாடியதால், மக்களின் நம்பிக்கையை அதிகரித்தீர்கள். அது முழுக்க முழுக்க உங்கள் தவறு அல்ல. அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடினார்கள். ஆனால் அது ஒரு மோசமான போட்டியால் மட்டுமே வந்தது. அது ஒரு மோசமான நாள். எனவே பாராட்டு ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது” என்று கூறினார்.

மேலும் மிடில் ஓவர்களில் பந்துவீசும்போது ஆஸ்திரேலியா அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்திய விதம் இறுதி மோதலை தீர்மானிக்கும் காரணியாக இருந்தது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் கூறினார். “11-40 வரையிலான இடைப்பட்ட ஓவர்களில், அவர்கள் பந்து வீசிய விதத்தின் காரணமாக மிகக் குறைவான பவுண்டரிகளே இருந்தன. அவர்கள் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு பேஸ்-ஆன் பந்து (வேகப்பந்து) வீசவில்லை. ஃபைன்-லெக் மற்றும் தேர்ட்மேன் உண்மையில் கீப்பருக்குப் பின்னால் இருந்தனர். அதனால் அவர்கள் சிறந்த திட்டங்கள் இருந்தன,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில், இந்திய அணி நன்றாக விளையாடியது. அதிர்ச்சியாக உணர்கிறேன் (இறுதிப் போட்டியில் தோற்றது), அவர்கள் தோல்வியடைந்தனர், ஆனால் பரவாயில்லை. 1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி பற்றி என்னிடம் இன்னும் கேட்கப்படுகிறது. ரசிகர்கள் இதை மறந்துவிடுவார்களா? இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு யானையின் நினைவு இருக்கிறது. நாங்கள் அந்த இறுதிப்போட்டியில் தோற்று 30 வருடங்கள் (24 வருடம்) ஆகிறது, டாஸ் வென்ற பிறகு நான் ஏன் பேட்டிங் தேர்வு செய்தேன் என்று இன்னும் என்னிடம் கேட்கிறார்கள். அதனால் சமூக ஊடகங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்;பாதி இது வெறும் நாடகம். ஒரு தேசமாக, நீங்கள் முன்னேற வேண்டும்; இன்னும் 6 மாதங்களில் மற்றொரு உலகக் கோப்பை வரவுள்ளது” என்று   கூறினார்.