ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்களும், இப்ராகிம் சத்ரான் 25 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ரஹ்மத் ஷா 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து ஒமர்சாய் மற்றும் முகமது நபி இருவரும் ஜோடி சேர்ந்து மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினர். பின் ஒமர்சாய் (22 பந்துகளில் 29 ரன்கள்) அவுட்டானார். பின் 18வது ஓவரில் சிறப்பாக ஆடிய முகமது நபி (27 பந்துகளில் 42 ரன்கள்) அவுட் ஆனார். மேலும் கடைசியில் நஜிபுல்லா ஜத்ரான் 11 பந்துகளில் 19 ரன்களும், கரீம் ஜனத் 9 ரின்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். பரூக்கி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோகித் சர்மா மிட் ஆப் திசையில் அடித்து விட்டு ஓடினார். ஆனால் கில் ஓடவில்லை.. அங்கு நின்ற பீல்டர் ஜத்ரான் பந்தை சிறப்பாக டைவ் செய்து பந்தை தடுத்தார். பின் பந்தை சரியாக  கீப்பரிடம் வீச ரோஹித் ரன் அவுட்ஆனார். இதனால் ரோஹித் சர்மா(0) கோபமாக வெளியேறினார்.

இதையடுத்து கில் – திலக் வர்மா கைகோர்த்தனர். இதில் சுப்மன் கில் சிறப்பாக தொடங்கிய நிலையில், முஜீப் உர் ரஹ்மானின் 4வது ஓவரில் ரன் அவுட் ஆனார். கில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். அதன்பின் சிவம் துபே மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர். பின் திலக் வர்மா 26 ரன்களில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சிவம் துவே மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் கைகோர்த்து பொறுப்பாக ஆடி இன்னிங்க்ஸை எடுத்து சென்றனர். பின் ஜிதேஷ் சர்மாவும் தன்பங்குக்கு 31 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றார்.

தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இருவரும் ஜோடி சேர்ந்தனர். சிவம் துபே 18வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடுத்தடுத்து விளாசி போட்டியை முடித்தார். சிறப்பாக ஆடி அரை சதம் விளாசிய சிவம் துபே 40 பந்துகளில்  5 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 60 ரன்களுடனும், ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடக்கிறது..