இந்தியாவிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை தெலுங்கானா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேற்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த வெண்கல சிலை ரூ. 146.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஐதராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரி கரையில் தலைமைச் செயலகத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்டமான சிலையை உருவாக்குவதற்கு 320 டன் துருப்பிடிக்காத இரும்பு மற்றும் 114 டன் வெண்கலம் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான சிலையை சிற்பி ராம் வஞ்சிர் சுதார் (98) என்பவர் உருவாக்கியுள்ளார். மேலும் இவரை கே. சந்திரசேகர் ராவ் பாராட்டியதோடு, தெலுங்கானா மாநில தியாகிகள் நினைவிடம், சட்ட பேரவை கட்டிடம் ஆகியவற்றுக்கு அருகில் அம்பேத்கர் சிலை இருப்பது மக்களுக்கு உந்து சக்தியாகவும் மாநில நிர்வாகத்திற்கு ஊக்கமாகவும் இருக்கும் என்று கூறினார்.