நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவித்தது. மேலும் பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடைசி தேதியாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை அறிவித்திருந்தது. மேலும் இந்த தேதி பிப்ரவரி 20 வரை நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் மக்களுக்கு போதுமான அளவில் புதிய நைரா நோட்டு க்களை வங்கிகளால் புழக்கத்தில் விட முடியவில்லை. மேலும் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் முக்கிய சாலைகளை மதித்தும் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதோடு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை அடித்து நொறுக்கி சூறையாடியும் வங்கிகளுக்கு தீவைத்தும் வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.