
தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மற்றும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. குற்றவாளி யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
கடந்த 2023ம் ஆண்டு 49,280 கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில், கடந்த 2024ல் 31,499 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழக காவல்துறையின் நடவடிக்கையால் 1782 குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு 181 மற்றும் 2024ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி செய்த போது, கடந்த 2012ம் ஆண்டு 1943 கொலைகளும், 2013-ல் 1927 கொலைகளும் நடந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு மிகக் குறைவாக 1540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது முதல்வர் தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவம் எல்லாம் மறந்து விடக்கூடாது. டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் நான் பேசுவதை கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யுங்கள் என்று தெரிவித்தார். இருப்பினும் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் வெளியிடப்பு செய்தனர்.