
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில் உள்ள ஒரு மஹால் முன்பதிவு செய்யப்பட்டது. திருமண நாளில், இசை, உணவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் பக்கம் புல்லட் பைக் வேண்டுமென கோரிக்கை விடுத்ததில் பரபரப்பு ஏற்பட்டது.
மணமகள் பக்கம் உடனடி பைக் வழங்க இயலாது என தெரிவித்ததால், மணமகன் பக்கம் கோபத்தில் சண்டையைத் தூண்டினர். வாக்குவாதம் அளவு இல்லாமல் வளர்ந்த நிலையில், மணமகன் தரப்பினர் சிலர் மணமகள் பக்கத்தினரை தாக்கியதாகவும், மஹாலில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சண்டை மற்றும் கொள்ளை சம்பவம் மஹாலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளின் தந்தை அவ்னீஷ் குமார் அளித்த புகாரில், “முன்பே ரூ.7 லட்சம் பணம் கொடுத்தோம்.
புல்லட் பைக் தர இயலாது என்பதற்காக இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து அஜித்மால் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.