சென்னை புழல் அருகே நடந்த சோகமான சம்பவம் ஒன்று அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர வாக்கிங் சென்றிருந்த 75 வயதான மூதியவர் மாரியப்பன், ராட்வீலர் ரக நாயின் கடிக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நாயை அழைத்து வந்தவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றும் கவியரசன் எனவும், வாக்குவாதத்துக்குப் பிறகு அவர் நாயை எரித்ததாகவும் தெரிகிறது.

 

சம்பவத்தன்று, அந்த பகுதியில் பெரிய நாயை வாக்கிங் அழைத்துச் சென்றதை பார்த்த மாரியப்பன், “இது பெண்கள், குழந்தைகள் நடமாடும் பகுதி. இவ்வளவு பெரிய நாயை இங்கு அழைத்து வருவது பாதுகாப்பல்ல” என கேட்டதையடுத்து, வக்கீல் கவியரசன் கோபமடைந்தார்.

‘நான் சொன்னா நாய் கடிக்கும்’ எனக் கூறியதுடன், ராட்வீலர் நாயை ஏவியதாக கூறப்படுகிறது. உடனே அந்த நாய், மாரியப்பனை கடித்து குதறியதால், அவர் மார்பு, தொடை பகுதிகளில் பலத்த காயங்களுடன் அலறி விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிய அவரது மனைவியையும், அருகில் இருந்த கொத்தனாரான ரமேஷையும் நாய் தாக்கியுள்ளது. இதையடுத்து போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், புழல் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட ராட்வீலர் நாயை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும், நாய்களைக் கட்டுப்பாடின்றி பராமரிக்கும் உரிமையாளர்களுக்கு எதிரான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.