ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருத்தலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு நிறைய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழக மக்களுக்கு ஏற்றவாறு அதிகமான உணவகங்கள் திருப்பதியில் இல்லை. தமிழக உணவுகள் திருப்பதியில் கிடைப்பதில்லை என பல பக்தர்கள் வருத்தப்படுகின்றனர். காலை, இரவு எப்பொழுது சாப்பிட்டாலும் சரியாக இல்லை என்ற பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருப்பதி மலையில் வீடுகளின் முன்பு பலர் இட்லி கடைகள் நடத்தி வருகின்றனர். இந்த வீட்டு இட்லிகள் தமிழக பக்தர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. காலையில் இட்லி,தோசை,பூரி ஆப்பம், வடை போன்ற தமிழக உணவுகள் சுட சுட விற்கப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் இந்த இட்லி கடைகளை தேடி சென்று விரும்பி சாப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு கடைகளிலும் ஏராளமான பக்தர்கள் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர். இது குறித்து தமிழக பக்தர்கள் கூறியதாவது, திருப்பதி மலையில் விற்கப்படும் வீட்டு இட்லிகள் மிகவும் சுவையாகவும், நல்ல முறையிலும் தயாரிக்கப்படுகிறது. இந்த வீட்டு இட்லி கடைகளை தேவஸ்தானம் கோவிலின் அருகிலும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.