ஐசிசி தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முன்னேறியுள்ளார்..

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போது இந்திய அணி செப்டம்பர் 15 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது, அதன் பிறகு இறுதிப் போட்டி நடைபெறும். இருப்பினும், இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் போட்டியிடும் மற்ற அணி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், இந்திய அணியின் இரண்டு போட்டி வெற்றிக்கு குல்தீப் யாதவ் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். இது அவருக்கு ஐசிசி ஒருநாள் தரவரிசையிலும் பெரும் சாதகமாக அமைந்தது.

குல்தீப் ஒருநாள் தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறினார் :

ஐசிசி புதிய ஒருநாள் தரவரிசையை அறிவித்துள்ளது, இதில் குல்தீப் யாதவ் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தார். அவர் 2 போட்டிகளில் விக்கெட் வேட்டை நடத்திஅதிரடியாக முன்னேறியுள்ளார். ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் 8 ஓவர்களில் 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை பேட்ஸ்மேன்களையும் திணறடித்தார் :

இதன்பிறகு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது சுழலில் திணற வைத்தார் குல்தீப் யாதவ். இது குறைந்த ஸ்கோரைப் பெற்ற போட்டியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெறும் என்று தோன்றியது. ஆனால் இலங்கை அணிக்கு குல்தீப் சிக்கலாக மாறினார். அவர் 9.3 ஓவர்களில் 43 ரன்களுக்கு 4 பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு விரட்டினார். பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 8வது இடத்திற்கு வந்த அவர், இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது ரேட்டிங் தற்போது 656. முதலிடத்தில் இருக்கும் ஜோஷ் ஹேசில்வுட் 692 ரேட்டிங் பெற்றுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் உலகக் கோப்பையிலும் அவர் அற்புதங்களை நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.