விஷால் மெகா மார்ட் ரீடெயில் நிறுவனத்தின் பாதுகாப்பு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் புதுமையான மீம்ஸ்களையும், வீடியோக்களையும், காமெடி கலாட்டாவையும் உருவாக்கி இருக்கிறது. சாதாரண வேலைவாய்ப்பு அறிவிப்பாக தொடங்கிய விஷயம்தான் தற்போது நாடு முழுவதும் செம வைரல் ஆகியுள்ளது.

விஷால் மெகா மார்ட் நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு ஊழியர்களை தேர்வு செய்யும் நோக்கில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புதான், அந்த மீம்ஸ் பரப்பலுக்கான துவக்கமாக இருந்தது. இந்த வேலை அறிவிப்புகள் WhatsApp, Facebook, Telegram, X  உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பரவியதால், மக்கள் இதனை காமெடியாக எடுத்துக் கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு தேர்வை சிலர் UPSC, IIT-JEE, NEET போன்ற தேசிய தேர்வுகளுடன் ஒப்பிட்டு பரிகாசம் செய்தனர்.
ஒரு பிரபல மீமில், “விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணம், விஷால் மெகா மார்ட் பாதுகாப்பு ஊழியராக தேர்வாகிவிட்டாராம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், “ஒரே கனவு – விஷால் மெகா மார்ட் செக்யூரிட்டி கார்ட்” எனும் வாசகமும் இன்டர்நெட்டில் வேகமாக பரவி வருகிறது.

இந்த டிரெண்ட் முழுக்க முழுக்க மக்களிடையே உருவாகும் நகைச்சுவை உணர்வையும், வேலைவாய்ப்பு தேடுபவர்களின் போட்டியான சூழ்நிலையையும் கிண்டலாக வெளிப்படுத்தும் வகையில் உள்ளது  இதன்விளைவாக,  ஒரு சாதாரண வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதையே முக்கியமான தேசிய போட்டி தேர்வாகவே காட்டும் அளவுக்கு மீம்கள் உருவாகி வருகின்றன.

இந்த நிகழ்வானது, சமூக ஊடகங்களின் சக்தி மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை சிரிப்புடன் அணுகும் மக்களின்  தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.