
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அடுத்த முருங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அப்பச்சிகுமார் (19). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
அப்போது இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மாணவி தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்பச்சி குமாருக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படங்களை அப்பச்சிக்குமாரும், அந்த மாணவியும் திருமணம் செய்து கொண்டது போல அப்பச்சிக்குமார் மார்ஃபிங் செய்து உள்ளார்.
அதன் பின் அதனை அந்த மாணவிக்கு அப்பச்சிகுமார் அனுப்பியுள்ளார். அதனைப் பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவி அப்பச்சிகுமாரை புறக்கணித்துள்ளார். அதனால் அப்பச்சிகுமார் மாணவியை காதலிக்க வேண்டும் என தொல்லை செய்ததோடு மார்ஃபிங் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மாணவி இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பச்சிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.