
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 35க்கும் மேற்பட்ட கணவர்கள், தங்கள் மனைவிகளால் மற்றும் அவர்களது காதலர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சிலர் வீடுகளிலிருந்து வெளியேற முடியாத நிலைமையில் உள்ளதாகவும், சிலர் நேரடி கொலை மிரட்டல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மீரட்டில் நடந்த டிரம் கொலை சம்பவம் போன்ற வகையில், தங்களை துண்டு துண்டாக வெட்டி கொல்லும் பாணியில் மிரட்டப்படுவதாக பலர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இவற்றில், ஸ்லம்புரி பகுதியைச் சேர்ந்த பாலா சுல்தான் தனது மனைவியிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர் தனது காதலனுடன் வாழ்வதாகவும் தெரிவித்தார்.
ஜனக்புரியைச் சேர்ந்த அமித் சென், தனது மனைவி பல ஆண் நண்பர்களுடன் உறவில் இருப்பதாகவும், தற்போது ராகுல் பாத்தம் என்ற காதலனுடன் தங்கியுள்ளதாகவும் கூறினார். அவரது மனைவி மற்றும் காதலர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதால், காவல்துறையால் பாதுகாப்பு தரப்படாத நிலையில், அவர் முதல்வரின் போஸ்டருக்கு கீழ் தர்ணா போராட்டத்தில் அமர்ந்துள்ளார்.
மேலும், நகர மையத்தில் வசிக்கும் விஷால் துபே, தனது மனைவியின் பன்முக உறவுகள் மற்றும் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களால் அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதேபோல, நகராட்சியில் வேலை செய்யும் அஜய் தாகூர், தனது மனைவி சோனியா ரத்தோர் மற்றும் அவரது காதலனால் உயிருக்கு பயப்படுகிறார் என கூறுகிறார்.
அவரது மனைவி அவரை டிரம்மில் நசுக்கி கொல்ல செய்து விடுவதாக மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு வழக்கில், விஷால் பத்ரா என்பவர் தனது மனைவி அவரது குடும்பத்தினரை அழைத்து, தன்னையும் தாயாரையும் தாக்கியதாக கூறுகிறார். இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்து, டிஎஸ்பி கிரண் அஹிர்வார் கூறுகையில், “கணவர்களிடம் இருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட கணவன்-மனைவி தகராறு வழக்குகள் வந்துள்ளன.
அதில் 540 வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், மொபைல் போன்கள் மற்றும் உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் தான் இவ்வாறு வழக்குகள் உருவாவதற்கான காரணங்களாக இருக்கின்றன,” எனத் தெரிவித்தார். சமரச முயற்சிகள் நிறைவாக இல்லாத சில வழக்குகளில், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.