வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகள் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ நடத்தி வருகிறார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற நடைப்பயணத்தில் பங்கேற்று மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், திருப்பத்தூரில் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, “தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் தொடர்வதற்கு அ.தி.மு.க. தயார். கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் இடமின்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று பிரேமலதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த சந்திப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க – தே.மு.தி.க. கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.