
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் மஞ்சுளா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநிலத்தின் பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் கட்சிப் பணியில் அவர் திறமையாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர் கட்சியில் ஈடுபடாமல் விலகி இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அதில் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மை கிடையாது. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்து விட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் கிடையாது. நான்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அதை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.