மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை அமைதியாக ரத்து செய்யாமல், தனது வருங்கால கணவரை, மயூரி கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். புனே கிராமப்புற காவல்துறையின் தகவலின்படி, அவர் தனது நண்பர் சந்தீப் கவ்டே உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து, சாகரைக் கொலை செய்ய ரூ.1.5 லட்சம் தொகையை முன் பணமாக  கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி புனே மாவட்டம் தாவண்ட் பகுதியின் யவத் போலீஸ் எல்லைக்குள் உள்ள கங்காவன் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே நடந்தது. ஹோட்டல் சமையல்காரராக வேலை பார்த்து வந்த சாகர் கடம் மீது மரக்கட்டைகளால் தாக்கி குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர். கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாகர், பின்னர் யவத் போலீசில் புகார் செய்தார். விசாரணையின் போது, அதித்ய ஷங்கர் டாங்க்டே என்பவர், தனது நண்பர்கள் உதவியுடன் இந்த தாக்குதலை திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் அதித்ய ஷங்கர் டாங்க்டே, சந்தீப் டாடா கவ்டே, சிவாஜி ரம்தாஸ் ஜரே, சுராஜ் டிகம்பர் ஜாதவ் மற்றும் இந்திரபன் சகாராம் கோல்பே ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புனே கிராமப்புற காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.