உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜாக்ரதி விஹார் பகுதியைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற தொழிலாளி, தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் ரூ. 10,000 தொகையை, ரூ.10 நாணயங்களில் கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக ஜீவனாம்சம் தொகையை வழங்காததால், நீதிமன்றம் அவர்மீது ₹2 லட்சம் தொகையைத் திரும்பப் பெற உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரஜேஷ், நான் ஒரு கூலி தொழிலாளி என்றும், தனது தாயார் நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவரது வருமானம் மருத்துவ செலவுகளுக்கே சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜீவனாம்சம் தொகை செலுத்த முடியவில்லை எனவும் கூறினார்.

பிரஜேஷின் திருமணம் 2019-ல் நடைபெற்றது. ஆனால் 2023-ல், அவர் மனைவி, 3 வயது மகனுடன் தனது தாய்வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின், மனைவி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் விசாரணையின்போது பிரஜேஷ் மாதம் ₹10,000 ஜீவனாம்சம் தொகை வழங்க உத்தரவிட்டது.

வியாழனன்று பிரஜேஷ் நீதிமன்றத்தில் ரூ.10 நாணய பையை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க முயன்றார். ஆனால், நீதிமன்றம் இது போன்ற நாணயத் தொகையை ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. பெரும் தொகையை நாணயங்களில் பெறுவதால் வங்கி பண பரிவர்த்தனை மற்றும் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.