தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, பலகாரங்கள் தயார் செய்வது மற்றும் புத்தாடைகள் வாங்க வேண்டும் என பல வேலைகள் உள்ளன. இவ்வாறு அடுக்கடுக்கான வேலைகள் தொடர்ந்து இருப்பதால் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை முன்கூட்டிய திட்டமிட்டு சுத்தம் செய்து அழகாகுங்கள்.

தமிழர்களிடையே கோலமிடும் வழக்கம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வரும் நிலையில் அரிசி மாவு கோலம், ரங்கோலி கோலம் மற்றும் விளக்கு கோலம் உள்ளிட்ட பல கோலங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை என்று ரங்கோலி கோலமிட்டு இரவு தீபங்களை அதன் இடையே ஏற்றி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள் இடமிருந்தால் பூக்கோலம் போட்டு அங்கேயும் தீபங்களை ஏற்றி தெய்வங்களை வழிபடலாம்.

பூக்கள் மற்றும் மா இலைகளால் தோரணம் செய்து வீட்டின் முன்பக்கம் உள்ளிட்ட இடங்களில் தொங்க விட்டால் அழகாக இருக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் உங்களது அலங்காரத்தை கொஞ்சம் எடுத்துக்காட்டும்.

தாமரைப் பூ லட்சுமி தேவியின் கையில் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். தீபாவளி என்று லட்சுமிதேவி வீட்டுக்குள் வந்து வறுமையை போக்கி செழிப்படைய செய்வார் என்பது புராண வரலாறு. வட மாநிலங்களில் லட்சுமி தேவியை வரவேற்று வாசலில் இருந்து பூஜை அறை வரை காலடி கோலமிட்டு வணங்குவார்கள். தமிழகத்தில் தாமரை பூவே லட்சுமிதேவிக்கு வைத்து பூஜை வழிபாடு செய்வார்கள்.

தீபாவளி நாளன்று விளக்குகளுக்கு ஏற்ப கோல்டன் கலர் சீரியல் லைட்டுகளை தேர்வு செய்து உங்களது வீட்டை அழகாக மாற்றலாம். வீடு முழுக்க சீரியல் லைட்டுகள் ஒளிமயம் பரவ செய்யும்.

எனவே இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த வருடம் தீபாவளியை உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் கொண்டாடி மகிழுங்கள்.