நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 9 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கர்பா நிகழ்ச்சி சிக்கலுக்குள்ளாகியுள்ளது. காரணம், பாஜக நிர்வாகி சிந்து வர்மா, கர்பா நிகழ்ச்சியில் கோமியம் (பசு  சிறுநீர்) குடிக்கும் மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்துக்கள் மட்டுமே விழாவில் கலந்துகொள்ள முடியுமென, இதனை உறுதி செய்வதற்காகவே கோமியம் குடிக்க வேண்டும் என்று அறிவிக்கபட்டுள்ளதாக சிந்து வர்மா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஆதார் அட்டையை மாற்றலாம், ஆனால் உண்மையான இந்துக்கள் கோமியம் குடிக்க மறுக்க மாட்டார்கள். அவர்கள் கோமியத்தை குடித்த பின் தான் கர்பா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவர்” என்று உறுதியாக கூறினார்.

இதற்கான பின்னணியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பக்தர்கள் கோமியத்தை குடித்த பிறகே அவர்களை கர்பா நிகழ்ச்சிக்கு அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளதாக அவர் விளக்கினார். இது, இந்துக்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறை என்றும் கூறினார். இந்த கருத்து, பலரிடமும் எதிர்ப்பை கிளப்பியது.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் உள்ளூர் தலைவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நவராத்திரி போன்ற பண்டிகையை வைத்து பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு திட்டம்தான் இதற்குப் பின்னணியாக உள்ளது எனக் குற்றம்சாட்டினர்.

காங்கிரஸ் மேலும், நவராத்திரி போன்ற பண்டிகைகளை மக்கள் ஒருமித்து கொண்டாட வேண்டியதொரு நிகழ்வாக இருக்கவேண்டும், ஆனால் பாஜக, இது போன்ற உத்தரவு மூலம் சமூகவிரோத செயல் நடத்துகிறது என்று தெரிவித்தது. பாஜக-வின் இந்த நடவடிக்கை தேவையில்லாதவாகும் என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் பிளவை ஏற்படுத்த முடியாது என்றும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு மத்தியப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி விழாவின் மையமாகவே சிலர் அதை அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.