சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் வைக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 59.86 ஏக்கர் பரப்பளவில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த பேருந்து நிலையத்தில் 226 புறநகர் பேருந்துகளை நிறுத்துவதற்காக 8 நடைமேடைகளும், 60 மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்காக 11 நடைமேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தனி அலுவலக கட்டிடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், மாநகர பேருந்துகளுக்காக தனி பணிமனை, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம், கடைகள், உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் வரை, புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜூன் மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.