தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார வேளாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அரசியல் எதிரி திமுகவுடனும், கொள்கை எதிர் பாஜகவுடனும் கூட்டணி கிடையாது. பாஜகவுடன் அதிமுக இருப்பதால் அதனுடனும் தவெக கூட்டணி அமைக்காது.

விஜயின் நிலைப்பாட்டை தான் நாங்கள் பொதுவெளியில் கூறுகிறோம். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால் அதை எதிர்ப்பதற்கு காரணம் இல்லை. அதனால் தான் எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி. பல தேர்தல்களில் தோல்வியடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்?.

தவெகவின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதே எங்களின் நிலைப்பாடு என்று கூறினார். இவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐடி பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது தொழிலதிபராக இருந்து திடீர் அரசியல்வாதியாக மாறி பல கட்சி தாவுதலில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுகவை பற்றி பேச எவ்வளவும் அருகதை கிடையாது.

இன்று தவெகவில் அமர்ந்து கொண்டு கருத்து கூறும் இவர் நாளை எந்த கட்சியில் இருப்பார் என்று தெரியவில்லை. எனவே உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.