இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடிகளில் தினம்தோறும் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிகமாக பயணிக்கும் பயணிகள் வருடாந்திர பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது இருக்கும் சுங்கச்சாவடிகளில் எல்லாம் பாஸ்ட்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் திட்டத்தின் படி தனிநபர் வாகன உரிமையாளர் 3000 ரூபாய் செலுத்தி ஓராண்டுக்கான டோல் பாஸை பெற்றுக் கொள்ள முடியும். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தகவல்கள் கூறுகின்றன.

அதேபோல காலம் முழுவதற்கும் மொத்தமாக 15 ஆண்டு காலத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி லைஃப் டைம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறைக்கப்படும். லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன் பெறுவர் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.