
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் அதிகூர் ரஹமான் (28) என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்றினால் பயாப்ஸி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதனை செய்தால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த மருத்துவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அந்த சிகிச்சைக்குப் பிறகு அதிகூர் கண் விழித்து பார்த்தபோது தன்னுடைய பிறப்புறுப்பு முழுமையாக அகற்றப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது பற்றி உடனே மருத்துவரிடம் கேட்டபோது, அவர் தெளிவான பதில் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் மருத்துவர் பதிலளிக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அதிகூர் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் “மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நோயாளிக்கு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.