
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பேசியபோது, முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் ரயிலில் பயணிக்கும் போது கீழ்வரிசை படுக்கை (Lower Berth) கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
முன்பதிவின் போது இவர்கள் தங்களது பிரிவை குறிப்பிட மறந்தாலும், டிக்கெட் முன்பதிவின் போது கீழ் படுக்கை காலியாக இருந்தால், தானாகவே அவர்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம், ரயிலில் ஏறியவுடன் கீழ் படுக்கைக்காக மற்ற பயணிகளிடம் மாற்றி வாங்க வேண்டிய நிலை இனிமேல் ஏற்படாது. இதற்காக, ஒரு ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொருத்து, ஒவ்வொரு பிரிவிலும் தனி இடங்கள் ஒதுக்கப்படும்.
எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்கள், ராஜ்தானி, சதாப்தி போன்ற சிறப்பு ரயில்களிலும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. ஒரு படுக்கை வசதியுள்ள பெட்டியில் 6 முதல் 7 கீழ் படுக்கைகள், 3 அடுக்கு ஏசி பெட்டியில் 4 முதல் 5 கீழ் படுக்கைகள், 2வது வகுப்பு ஏசி பெட்டியில் 3 முதல் 4 கீழ் படுக்கைகள் இவ்வகை பயணிகளுக்காக ஒதுக்கப்படும்.
ரயில்களில் இருக்கைகள் காலியாக உள்ளபோது, முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கீழ் படுக்கைகள் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம், சிறப்பு தேவைகள் உள்ள பயணிகள் எந்த இடத்திலும் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் சூழல் உருவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.