குஜராத் மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அதானி மின் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு தொகைக்கு அரசு மின்சாரம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹேமந்த் ஆஹிர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் ஹனு தேசாய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது, கடந்த 2021-22 ஆம் ஆண்டுகளில் அதானி மின் நிறுவனத்திடம் இருந்து 11,596 மில்லியன் யூனிட் மின்சாரத்தை அரசு பெற்றுள்ளது.

இதற்காக ரூ. 8160 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நிலக்கரி விலை ஏற்றத்தின் காரணமாக மின்சார கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 2.83 முதல் ரூ. 8.83 காசுகள் வரை உயர்த்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் கடந்த 2007-ம் ஆண்டு அதானி மின் நிறுவனத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே மின்சாரத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறினார்.