நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 3 நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 18 எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு ராகுல் காந்தி ஜனநாயகம் குறித்து வெளிநாட்டில் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து பாஜக மற்றும் 18 எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

நேற்று அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி 18 எதிர்கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் 105-வது பிரிவில் எம்பிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தின் சாராம்சம் மற்றும் பொருள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்பி மனிஷ் திவாரி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். மேலும் இதனால் இன்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.