
தொடர் சைபர் மோசடியில் ஈடுபட்டதற்காக முன்னாள் வங்கி ஊழியர் தன் சிங் ராஜ்புத் (31) என்பவரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்த ராஜ்புத் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 போலி கணக்குகளை தொடங்கி சைபர் கிரைம் செய்து வந்துள்ளார்.
இதில் அவர் ஏழை மக்களை குறிவைத்து இவ்வாறு செய்துள்ளார். இந்நிலையில் துவாரகாவில் வசிக்கும் பிரேம் லதா என்பவர் ராஜ்புத் தன்னிடம் 60000 ரூபாய் மோசடி செய்ததாக காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா பகுதியைச் சேர்ந்த பார்தி மீனா என்பவருக்கு சொந்தமான கணக்கில் இந்த மோசடி தொடங்கியது தெரியவந்தது. இதில் ராஜ்புத் அவருக்கு எருமைக்கு கடன் வாங்கி தருவதாக கூறி வங்கியில் கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர் கடனை செயல்படுத்த முடியவில்லை என்றும் உங்களது கணக்கை முடித்து விடுவதாகவும் கூறி அவரது டெபிட் கார்டு மற்றும் வங்கி ஆவணங்களை வாங்கிக் கொண்டுள்ளார்.
அதன்பின் அவர் அவரிடம் உங்களது கணக்கை முடிக்கப் போவதால் இந்த OTPயை எனக்கு அனுப்புமாறு கூறியுள்ளார். இவ்வாறு அவர் மொத்தம் 16 கணக்குகளை தொடங்கி முடிப்பது போல் நடித்து ஒவ்வொருவரிடமிருந்தும் OTPயை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த OTPகளை வைத்து வங்கி கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை மாற்றுவதற்காக பயன்படுத்தியுள்ளார்.
அதன்பின் அவர் இந்த வங்கி கணக்குகளை வைத்து மொத்தம் 153 சைபர் க்ரைம் செய்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் அவரது வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் வங்கி கணக்குகளை வைத்து மோசடி செய்ததால் அவரை பணிநீக்கம் செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் போலீசார் தீவிர தேடுதலுக்குப் பின்பு தற்போது அவரை அதிரடியாக கைது செய்ததுடன் அவரிடம் இருந்த டெபிட் கார்டு மற்றும் வங்கி கணக்கு அட்டை போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.