நீலகிரி மாவட்டத்திலுள்ள உட் பிரையர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கர் தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காட்டு யானை தாக்கியதாக கூறி சங்கரை அவரது நண்பர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் சுரேஷ் குமார் உள்ளிட்ட வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அரசு டாக்டர் பரிசோதனை செய்ததில் காட்டு யானை தாக்கியதற்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் காட்டு யானையை பார்த்து சங்கர் அச்சத்தில் ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததால் சங்கருக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, யானை தாக்கியதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. யானையைக் கண்டு சங்கர் ஓடிய போது தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். எனவே காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் வேலைகளை முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டிற்கு திரும்ப வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.