உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலியான மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடுக்க கடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. BIS சான்றளிக்கப்படாத தலைக்கவசங்களை அணிவதற்கும் விற்பனை செய்வதற்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதற்கு இந்திய இருசக்கர வாகன தலைக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் (2WHMA) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் உத்தரபிரதேசத்தில் சுமார் 46,000 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இதில் 24,000 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில், தவறான ஹெல்மெட் பயன்பாடு ஒரு முக்கியக் காரணியாக கருதப்படுவதால், பாதுகாப்பு தலைக்கவசங்கள் குறித்து விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சட்டத் தடையுடன் கூடிய அமலாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, BIS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை அணிவோர் மற்றும் விற்பவர்களிடம் சட்டப்படி FIR பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த நடவடிக்கையை 2WHMA தலைவர் ராஜீவ் கபூர் வரவேற்று, “போலி ஹெல்மெட்கள் அமைதியான கொலையாளிகள்.

உத்தரபிரதேச அரசு எடுத்திருக்கும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கை, பிற மாநில அரசுகளுக்கும் ஒரு முக்கியமான செய்தியைத் தரும். நாட்டில் அனைத்து தலைக்கவசங்களும் BIS சான்றுடன் இருக்க வேண்டும் என்பது இப்போது அவசியம்,” எனக் கூறினார். இந்த நடவடிக்கை, ஒரு தேசிய சாலை பாதுகாப்பு இயக்கத்தின் தொடக்கமாக அமையக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.