
இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதலில் காசாவில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாசுக்கு ஆதரவு கொடுக்கிறது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் கொன்று வரும் நிலையில் அடுத்தடுத்து புதிய தலைவர்களை நியமிக்கிறார்கள்.
அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நசரல்லா கொல்லப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதிய ஹிஸ்புல்லா தலைவராக ஹஷேம் சபிதீன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இவரையும் கொலை செய்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தலைவரையும் கொன்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1550 க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.