பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசு 16 இந்திய யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. இதனுடன், 31 யூடியூப் இணைப்புகள் மற்றும் 32 இணையதளங்களும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (PTA) மூலம் முடக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு மற்றும் இணைய சூழல் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி PTA வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள இணைய பயனர்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான இணைய சூழலை வழங்கும் நோக்கில் தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஆன்லைன் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து, அதற்கு எதிராக கடுமையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் PTA தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களைத் தடை செய்தது. டான் நியூஸ், சமா டிவி, ஜியோ நியூஸ் உள்ளிட்டவை, இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. இரு நாடுகளும் மது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற ஊடகத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் பஹல்காம் தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பதில் தாக்குதல் நடத்தி இந்தியா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்