குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஹோட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டது. நேற்று மதியம் பிள்ளையார் கோவில் அருகே சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறி பறந்து ஒரு கடையில் விழுந்தது. மேலும் காற்று பலமாக வீசியதால் அருகில் இருக்கும் மற்ற கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதற்கிடையே டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்த நான்கு கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சுமார் 50 கடைகள் எரிந்து நாசமாகி, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் விபத்துக்குள்ளான கடைகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, குற்றாலத்தில் சீசனுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் தீ விபத்தில் சேதமானது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடு செய்யப்படும் என கூறியுள்ளார்.