திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அருகே மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல காட்சி அளிக்கிறது. அங்கு ஏராளமான பாம்புகளின் நடமாட்டம் இருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்கார் மூலம் செல்வதற்காக நுழைவு சீட்டு வாங்கி காத்திருப்போர் அறைக்கு சென்றனர்.

அப்போது அறைக்கு அருகே பாம்பு இருப்பதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரோப்கார் நிலையத்தில் இருக்கும் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு பழனி அருகே இருக்கும் வனப்பகுதியில் விடப்பட்டது.