அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் கொளஞ்சிநாதனின் ஓட்டு வீடு தீப்பிடித்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் துணிமணிகள், ஆவணங்கள், மர சாமான்கள் என 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.