நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பத்மநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நிதி நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழாவை கோவையில் நடத்த முடிவு செய்து கடந்த மாதம் 14-ஆம் தேதி பீளமேடு நவ இந்தியா பகுதியில் இருக்கும் ரேடிசன் ப்ளூ என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அறை மற்றும் விழா நடத்தும் ஹால் ஆகியவற்றை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விழா நடைபெற்று முடிந்த பிறகும் 20 நாட்களாக அறையை காலி செய்யாமல் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் ஹோட்டல் ஊழியர்களிடம் அறையை காலி செய்யப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். அப்போது ஊழியர்கள் 8 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அந்த தொகைக்காக பத்மநாதன் கொடுத்த காசோலை பணமில்லாமல் திரும்பி விட்டது. இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் கேட்டபோது பத்மநாதனிடம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் முழு தொகையையும் செலுத்துமாறு கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பத்மநாதன் பணம் செலுத்த மறுப்பு தெரிவித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஹோட்டல் மேலாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பத்மநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.