ஒடிசா மாநிலத்தில் உள்ள மனோஹர்பூரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிஷினரி கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவர் மற்றும் அவரது இரு மகன்கள் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரு வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலையை செய்தவர் மகேந்திர ஹெம்பிரம்.

இந்த கொலை சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை மகேந்திரஹெம்பிரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜெயிலர் மனஸ்வினி கூறியதாவது, ஒடிசா மாநில தண்டனை மறுமொழி குழு பரிந்துரையின்படி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் நல்வழிப்பட்டு நடந்ததற்காக அவரை அரசு விடுவிக்க உத்தரவிட்டது எனக் கூறினார்.

இந்த விடுதலை அரசியல் விவாதங்களையும், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இந்த விடுதலை சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது, இது இந்திய நீதிமன்றத்திற்கு கறை படிந்த நாள். அந்தக் கொடூர கொலைக்கு காரணமான குற்றவாளி சிறையில் நன்கு நடந்தார் என அவரை விடுவித்து இருப்பது எப்படியான நீதியை சமூகத்திற்கு வெளிப்படுத்துகிறது? என விமர்சித்துள்ளார்.

ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இந்த விடுதலைக்கு வரவேற்பு அளித்துள்ளது. மேலும் இந்த சமயத்தில் அந்தக் கொலை குற்றத்திற்கு தலைமை தாங்கிய குற்றவாளி தாரா சிங்க்கிற்கும் சிறை தண்டனை குறைப்பதற்காக அவரது வழக்கறிஞர் கோரிக்கை மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.