
லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர டியாகோ ஜோட்டா(28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா(26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் கார் தீ பிடித்து எறிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரோ சில்வாவும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டயர் வெடித்து இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். டியாகோ ஜோட்டா போர்ச்சுகல் தேசிய அணிக்காக 50க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நேஷனல் லீக் கால்பந்து தொடரை வென்ற போர்ச்சுகல் அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா போர்ச்சுகலில் உள்ள பெனாபீல் கிளப்புக்காக விளையாடு வந்தார்.
இந்நிலையில் இவர்களது மரணம் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களுக்கு லிவர்பூல் கிளப், போர்ச்சுகல் கால்பந்து சங்கம், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவை இரங்கல் தெரிவித்துள்ளன.