உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஹேவா மண்டியில் உள்ள சந்தீப் டிரேடர்ஸ் எனும் விநியோகஸ்தரின் சேமிப்பு கிடங்கை சோதனை செய்தனர். அதில் 2025 பிப்ரவரியில் காலாவதியாகும் பாட்டில்களின் ‘2’ என்ற எண்ணை ‘8’ என மாற்றி அவை ஆகஸ்ட் 2025 வரை செல்லுபடி ஆகும் என்று காட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு லட்சுமி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் தான் சோடா பாட்டில்களை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கை சோதனை செய்தனர். அப்போது மேலும் 1000-க்கும் மேற்பட்ட காலாவதியான குளிர்பான பாக்ஸ்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கான வீடியோ ஆதாரங்களும், விற்பனை மற்றும் பில் பதிவுகளும் கைப்பற்றப்பட்டு உரிய விளக்கங்களை கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரி ஹிதேந்திர மோகன் திவாரி, உமாசங்கர் சிங், கமல் நாராயணன் மற்றும் ஷைலேந்திர ஸ்ரீவாஸ்தவா ஆகியோரும் பங்கேற்றனர்.