தமிழ்நாட்டில் 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட சிசிடிவி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் பொது மக்களுக்கு, பொது இடங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த விதத்தில் இருக்கிறது ? என்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி,  தமிழக அரசுக்கு எதிராகவும் – மத்திய அரசுக்கு எதிராகவும் ஒரு பொதுநல வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

அந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்திருக்கிறது. இன்றைய வழக்கு  விசாரணையில் ரயில்வே துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும்,  மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024 – 2027  மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்,  இந்த வழக்கு எடுக்கப்பட்டு ஏழரை ஆண்டுகளாக இருக்கிறது. இதுவரை 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட கேமராக்கள் நிறுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் ரயில்வே துறைக்கு அக்கறை இல்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். எனவே மீதமுள்ள ரயில் நிலையங்களில் எவ்வளவு காலத்தில் பணிகள் முடிக்கப்படும் ? என்பது தொடர்பான ஒரு அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்திருக்கிறார்கள்.