தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் வெற்றி முகத்தை தொட்ட நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகும் விதமாக மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றியை தேடி தந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுக சார்பாக என்னுடைய நன்றிகள் என கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் வாக்காளர்களிடம் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மக்கள் மிகப்பெரிய ஆதரவை இடைத்தேர்தலில் வழங்கியுள்ளனர். அதேபோல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்கு வாக்காளர்கள் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளனர். விரைவில் சந்திக்க இருக்கும் மக்களவை தேர்தலில் வெற்றிக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றி மக்கள் நிச்சயமாக வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.