உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா நடத்துவது அனைவரும் அறிந்ததே. இந்த உலக கோப்பை திருவிழா இன்று முதல் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு மோதியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ஆடவில்லை. அதேபோல இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்களும், டேவிட் மலான் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹாரி புரூக் 25 ரன்களும், மொயின் அலி 11 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.. அதன்பின் பட்லர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த லிவிங்ஸ்டோன் 20 ரன்களிலும், மறுபடியும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த ஜோ ரூட் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் கடைசியில் கிறிஸ் வோக்ஸ் 11, சாம் கரன் 14, என அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது. மார்க் வுட்  13 ரன்களுடனும், அடில் ரசித் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரச்சின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக டேவான் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம் கரன் வீசிய 2வதுவரின் முதல் பந்தில் யங் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரச்சின் மற்றும் கான்வே இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது. குறிப்பாக தொடக்கத்தில் ரச்சின் ரவீந்தரா அதிரடியாக பவுண்டரிகளையும், இடையில் சிக்ஸர்களையும் விளாசினார். தொடர்ந்து இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். அதன்பின் கான்வே மற்றும் ரச்சின் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். ரச்சின் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளது நியூசிலாந்து அணி. ஆட்டமிழக்காமல் கான்வே 120 பந்துகளில் (19 பவுண்டரி, 3 சிக்ஸர்) 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் (11 பவுண்டரி, 5 சிக்ஸர்) 123 ரன்களும் எடுத்தனர். 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இன்று பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி :

டேவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கே, வி.கீ), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட்.

இங்கிலாந்து அணி :

ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே, வி.கீ), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷித் மற்றும் மார்க் வூட்.