தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. கடந்த 5- ஆம் தேதி கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானையை பிடித்து ஆனைமலை காப்புகாட்டில் விட்டனர்.

இதனை அறியாத கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானை மக்னா யானையை தேடி சின்னகம்மாளப்பட்டி, கரகதஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகிறது. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நண்பனை தேடி 5 நாட்களாக ஆக்ரோஷமாக யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.