கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரசேரி ராஜகோபால் தெருவில் எலக்ட்ரீசியனான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்சிகா(11), அஸ்மிதா(9) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் அனிதா அருகே இருக்கும் ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்து வந்துள்ளார்.

ஆனால் நாகராஜனுக்கு தனது மனைவி வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை. மேலும் பணம் தேவை என்பதால் அனிதா தனது கணவரின் பேச்சை மீறி வேலைக்கு சென்று வந்தார். இதனால் கோபத்தில் நாகராஜன் மது குடித்துவிட்டு தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து  மது குடித்து வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ராஜராஜன் கூறியதை பொருட்படுத்தாமல் அனிதா வேலைக்கு சென்றார். இதனால் கோபத்தில் இருந்த நாகராஜன் மதுபோதையில் வீட்டில் இருந்த அனைத்து துணிகளையும் தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகளின் மீது குவித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனால் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். இதற்கிடையே நாகராஜன் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.