தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி கடந்த 2015-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம் கட்டினால் அதிக பணம் கிடைக்கும் என்று நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்த நிலையில், இவரது பேச்சை நம்பி பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில், உத்தமபாளையம் அருகே காமாட்சிபுரம் பால்பண்ணை தெருவை சேர்ந்த டேவிட் உள்பட 63 பேர் இந்த நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளனர். இவர்கள் 50 லட்சத்து 46 ஆயிரத்து 430 ரூபாய் பணத்தை  செலுத்தி உள்ளதாகவும், ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தியவர்கள் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பாண்டியன் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட மலைச்சாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலை அளிக்கபட்டு  நீதிபதி தீர்ப்பளித்தார்.  பின் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மலைச்சாமி, போலீசாரால் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.