
AIADMK தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி (EPS), நீட் தேர்வின் அடிப்படையில் தி.மு.க அரசு மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். சேலத்தை சேர்ந்த மாணவி புனிதா, நீட் தேர்வில் வெற்றிபெறாத விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார். அதனை சுட்டி காட்டிய எடப்பாடி நீட் தேர்வை ரத்து செய்வதாக தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறியது என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.
திமுக தலைமையிலான அரசு 41 மாதமாக ஆட்சி நடத்தி வந்தாலும், இந்த தேர்வை நிறுத்துவதற்கான எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிட்டு, நீட் தேர்வில் மாணவர்கள் சிக்கித் தவிப்பதற்கு சம்மந்தப்பட்ட கட்சியினர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க இரட்டை வேஷம் போடுகிறது. திமுக, ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை நிறுத்த வாக்குறுதியளித்திருந்தாலும், இதுவரை சிறந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்திலேயே இருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர் என்பதற்கு மத்திய அரசின் மனநிலை தான் காரணம் என குற்றம் சாட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். NEET-ஐ ரத்து செய்ய தவறிய மத்திய அரசின் நடவடிக்கையை அவர் கடுமையாக கண்டித்தார்.