இந்திய குடிமகன்களுக்கு ஆதார், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறதோ, அதேபோன்று வாகன ஓட்டிகளுக்கும் டிரைவிங் லைசென்ஸ் முக்கியமான ஒன்றாக உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெற நாம் சில ஆவணங்களையும் கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் டிரைவிங் லைசென்ஸ் பெற சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.

ஆனால் தற்போது பல நிறுவனங்களும் ஆன்லைனில் தன் சேவைகளை வழங்கி மக்களின் சிரமத்தை குறைக்கிறது. எனினும் ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட சில விஷயங்களுக்கு நேரில் போக வேண்டியதிருக்கும். இந்தியாவில் புது டிரைவிங் லைசென்ஸ் பெற ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். முதலாவதாக பரிவஹான் இணையதளத்துக்கு சென்று அதில் தேவையான சேவையை தேர்ந்தெடுக்கவும்.

பின் மாநிலத்தை தேர்ந்தெடுத்து “அப்ளிக்கேஷன் பார் நியூ லர்னர்ஸ் லைசென்ஸ்” என்பதனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக  படிவத்தை நிரப்பி எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும். அதனை தொடர்ந்து சில ஆவணங்கள், புகைப்படங்களை பதிவேற்றி, ஆவணத்தில் மின்-கையொப்பமிடவேண்டும்.

பதிவேற்ற செயல்முறை முடிந்தவுடன் கட்டணம் செலுத்தி ஸ்லாட்டை முன் பதிவு செய்து லைசென்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறலாம். ஆதாருடன் கூடிய விண்ணப்பதாரருக்கு ஆன்லைனில் சோதனையானது நடத்தப்படலாம். அதே நேரம் ஆதார் கார்டு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு பிரத்யேக மையங்களில் சோதனை நடத்தப்படலாம். லைசென்ஸ் உங்களுக்கு வழங்கப்பட்ட 30 தினங்களுக்கு பிறகு நீங்கள் ஆர்டிஓ-விடம் உடல் ரீதியான சோதனைக்கு போக வேண்டியிருக்கும்.