உத்திர பிரதேச மாநிலத்தில் அம்ப்ரோஹா மாவட்டத்தில் பிம்பூர் ரயில்வே கேட் அருகே அதிகாலை சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தக் காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். இதில் முன் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். மேலும் சிலர் அந்த காரில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரயில்வே கேட்டை கடந்த கார் மறுபுறம் உள்ள சாலையில் ஏறுவதற்கு பதிலாக ரயில் தண்டவாளத்திலேயே சுமார் 50 மீட்டர் தூரம் அதிவேகத்தில் சென்றுள்ளது.

இதனால் கார் தண்டவாளத்திலேயே வேகமாக சென்று நின்றுள்ளது. தண்டவாளத்தில் கார் ஒன்று நிற்பதை கண்ட ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சியில் உடனடியாக ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் காரை ஓட்டி வந்த நபர் மது அருந்திவிட்டு போதையில் இருப்பது தெரிய வந்தது. ரயில்வே ஊழியர்கள் எச்சரித்த போது தான் கார் தண்டவாளத்தில் நிற்பதையே ஓட்டுனர் உணர்ந்துள்ளார். பின்னர் காரில் இருந்தவர்கள் பதறி அடித்து தண்டவாளத்தில் இறங்கி ஓடிள்ளனர்.

ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒன்று கட்டுப்பாட்டுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் உடனே நிறுத்தப்பட்டது. 35 நிமிடங்களுக்கும் மேலாக போராடி காரை தண்டவாளத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. மேலும் காரை ஓட்டி வந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே ஊழியர்களின் செயலால் மிகப்பெரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.