தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிலையில் கார்த்தியின் பையா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி பையா 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிங்குசாமி பையா 2 படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பையா 2 திரைப்படத்தில் யார் ஹீரோ ஹீரோயினாக நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் அண்மையில் ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே பையா 2 படத்தில் நடிப்பார்கள் என்று தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.