ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் மற்றும் 300 ரூபாய் டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் தற்போது சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் எந்த தேதிக்குள் வெளியிடப்படும் என்ற விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி மூத்த குடிமக்கள், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு 23-ஆம் தேதி டிக்கெட் வெளியிடப்படும். ஆர் ஜே சேவைகளுக்கான டிக்கெட் 21-ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு குழுக்கள் மூலம் ஒதுக்கப்படும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம் போன்றவைகளுக்கான டிக்கெட் 18 முதல் 20-ம் தேதிக்குள் வெளியிடப்படும். விஐபி தரிசன டிக்கெட் மற்றும் அங்க பிரதட்சனை டோக்கன்கள் 23-ஆம் தேதி வெளியிடப்படும். 300 ரூபாய் தரிசன டிக்கெட் 24-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் திருமலையில் தங்கும் அறை முன்பதிவு டிக்கெட்டுகள் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.