கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சரின் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தான் வட மாநிலத்தவர்கள் செய்கின்ற வேலையைப் பற்றி கேவலமாகவும் நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் பேசுகிறார்கள். இதை முதல்வர் ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை வந்திருக்காது. பாஜகவில் இருந்து யார் விலகி சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதன்பிறகு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரு தேர்வு நடைபெறுகிறது என்றால் அந்த தேர்வுக்கு தயாராக இருப்பவர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள்.

இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் குறைந்த அளவில் பங்கேற்கிறார்கள் என்று புகார் சொல்லி என்ன ஆகப்போகிறது. தமிழக மாணவர்கள் குறைந்த அளவில் தேர்வில் பங்கேற்கிறார்கள் என்றால் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் அரசின் கடமை. அதை விட்டுவிட்டு தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை தாருங்கள் என்று கேட்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறிவரும் நிலையில் அங்கு பல்வேறு விஷயங்களை சந்திக்க வேண்டி இருக்கும். முதலில் தேசிய அரசியல் தலைவர்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முதலில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை தெளிவாக கூறுங்கள். அதன் பிறகு தேசிய அரசியலுக்கு வாருங்கள். திமுக அமைச்சர்கள் கல்லெடுத்து வீசுவது ஓட்டு போட்ட மக்களை இழிவு படுத்தி பேசுவதுமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எஜமானர்கள் போன்று ஓட்டு போட்ட மக்கள் அடிமைகள் போன்றும் நினைக்கிறார்கள். மேலும் சுயமரியாதை எனும் பேசும் இவர்கள் தான் காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.